Sunday, December 26, 2010

தீ குடித்த வனம்.


கொடும் நெருப்பில் வேகும் என் பசுமை காடுகள்,
அதன் உள்ளிருந்து கேட்கும் உயிர்களின் அபய குரல்கள்,
அணைக்க தண்ணீர் தேடி ஒரு புறம்,
காப்பாற்றுவதற்கு ஓடி ஒரு புறம்,
பற்ற வைத்தவரை தேடி ஒரு புறம்,
எல்லாவித கரங்களை இழுத்தும்
உதவிக்கு ஒரு கரமும் வராத சோகம் ஒருபுறம்.
கொஞ்சம்போல் வாய்காலில் ஓடிய தண்ணீரை
நெஞ்சு மூச்சிரைக்க இறைத்து பார்த்தும்
என்னால் எறும்பை கூட காப்பாற்ற முடியாத
இயலாமை கோபம் ஒருபுறம்.

"யாரேனும் காப்பாற்ற வாருங்கள் "
என்று குரலெழுப்ப சென்றவனின் கழுத்தை
மாயக்கரமொன்று பற்றி நெரித்தது.
நெடுங்காலம் உரமேற்றி,
கொடுமிரும்பால் ஆழத்தோண்டி,
கணுக்கால் கடுக்க விதை விதைத்து,
கடுமிருளிலும் தண்ணீரூற்றி,
குறுக்கு நோக கலை எடுத்து வளர்த்த காடு
என் கண்முன்னே பாவி நெருப்பில் சாகிறதே..


"கடைசி கட்ட சாவில் இருக்கிறோம்
கரம் நீட்டுங்கள் என் தாய் தமிழ் மக்களே"என்ற குரலுக்கு,
வெளிநின்ற நான் சத்தமாய் கூறினேன்.
"என்னை அழைக்காதீர்கள்,

நான் சொகுசு வாழ்க்கைக்குள் சொக்கி போன தமிழன்,
இலவசம் பெற்றே மானமிழந்த மூடன்,
வண்ண பெட்டிக்குள் வடிவம் தொலைத்த பைத்தியக்காரன்,
நான் ஒரு அடிமை, எனக்கு கரமில்லை,
உங்களுக்காக குரல் எழுப்ப உரிமை இல்லை,
என்னால் இயலாது என்று.
ஆறரை கோடி தமிழன் மிச்சமிருந்தும்
அனாதைகளாய் செத்த இனம் நோக்கி ..



2 comments:

  1. வலியும் அவமானமும் பொறுமலும் தெரியுதுங்க....
    நிஜம் சுடும் அவஸ்தை...

    ReplyDelete
  2. Thank u for ur comment sister.after a long gap i m return back to my pen.Thank u

    ReplyDelete